4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் (30-09-2025), மாலை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை (01-10-2025) 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா-வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நாளை காலை கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.