5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மார்ச் இறுதி முதலாக கோடை வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வருகிறது. ஏப்ரல் தொடக்கமே இப்படி என்றால் மே மாதம் எல்லாம் என்ன ஆகும் என மக்கள் அயற்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப்.8ம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு அதிக வெப்பநிலை நீடிக்கும் என்றும் வடக்கு உள் கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா மாநிலங்களிலும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று (ஏப்ரல் 4) தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை வேறுபாடு காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.