சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் : இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 11வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு,179 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன், வியான் முல்டர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 29 ஓவர்களிலேயே 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ஹெய்ன்ரிக் க்ளாசென் அதிகபட்சமாக 64 ரன்களும், டெர் டசன் 72 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியது.
குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், குரூப் பி-யில் இருந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய அதே நான்கு அணிகள், தற்போது சாம்பியன்ஸ் டிராஃபிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடதக்கது.