சென்னையில் 1 மணிநேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு - மூளையாக செயல்பட்ட நபர் என்கவுண்டரில் உயிரிழப்பு!
சென்னையில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் என அடுத்தடுத்து 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து காவல் நிலையங்களில் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து இரண்டு குற்றவாளிகளை ஏர்போர்ட்டில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்தவர்களிடன் விசாரணை மேற்கொண்டதில் இராணி கொள்ளையர்கள் என தெரிய வந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்பட்ட ஜாஃபர் நகைகள் தரமணி பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளான். இதை அடுத்து போலீசார் நகைகளை பறிமுதல் செய்ய குற்றவாளி ஜாஃபரை தரமணிக்கு ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றபோது, நகைகள் எடுத்து தருவதாக கூறி திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
தாக்குதலை சற்றும் எதிர்பாராத போலீசார் பதிலுக்கு தற்காப்புக்காக ஜாஃபரை சுட்டதில், அவர் மார்பில் குண்டு பயந்து சுருண்டு விழுந்தார். ஜாஃபரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை அடுத்து ஜாஃபர் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.