மணிப்பூரில் தொடரும் வன்முறை - 6 பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் அமல்!
மணிப்பூரில் பதற்றமானதாக அறிவிக்கப்பட்ட 6 பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டு வசதிக்காக, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தின் சேக்மாய், லாம்சங், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் லாம்லை, ஜிரிபாம் மாவட்டத்தின் ஜிரிபாம், காங்போக்பியின் லீமாங்கோங் மற்றும் பிஷ்னுபூரின் மோய்ராங் ஆகிய 6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகளின் சிறப்பு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதும் AFSPA சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த ஆறு காவல் நிலையங்கள் உட்பட 19 காவல் நிலையங்கள் விலக்கு அளிக்கப்பட்டிருந்தன.
இதையும் படியுங்கள் : AUSvsPAK | டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள்… சாதனை படைத்த கிளென் மேக்ஸ்வெல்!
முன்னதாக, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 237 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.