ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி - ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!
அரசியல் கட்சித் தலைவர்களின் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஆப்பிளும் ஒன்று. ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடிகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பிக்களின் ஆப்பிள் போன்களுக்கு திடீரென ஹேக்கர்கள் டார்கெட் செய்வதாக ஒரு அலர்ட் வந்துள்ளது. காங். எம்.பி. சசி தரூர், சிவசேனாவின் (உத்தவ் அணி) பிரியங்கா சதுர்வேதி, திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, காங். செய்தி தொடர்பாளர் பவன் கேரா, AIMIM கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.
இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர்கள், இது பாஜக அரசின் செயல் என குற்றம்சாட்டி இருந்தனர். இதையடுத்து, ‘அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வந்த நோட்டிபிகேஷனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. சில எச்சரிக்கை நோட்டிபிகேஷன்கள் தவறானவையாக இருக்க வாய்ப்பு உள்ளது’ என்று ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : ஆம் ஆத்மி அமைச்சர் வீட்டில் ED ரெய்டு - யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வந்த அலர்ட் குறித்து CERT-In (இந்திய கணினி அவசரகால பதில் குழு) ஆய்வு செய்து வருவதாகவும், ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.