மானிய விலையில் கோதுமை மாவு - 'பாரத் ஆட்டா'வை அறிமுகம் செய்த மத்திய அரசு
பாரத் ஆட்டா என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (நவ. 6) தொடக்கி வைத்தார்.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் கீழ் இந்த நடமாடும் விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற கூட்டுறவு அமைப்பு சந்தைகளின் கீழ் செயல்படும் கடைகளிலும் மானிய விலையிலான பாரத் ஆட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலையேற்றம் காரணமாக இந்திய சந்தைகளில் கோதுமை பற்றாக்குறை நிலவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மானிய விலையிலான கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கு பாரத் ஆட்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பாரத் ஆட்டா என்ற பெயரில் மானிய விலையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50 காசுகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வாகனங்கள் மூலம் பாரத் ஆட்டா விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டது.
அதன்படி இன்று 100 நடமாடும் பாரத் ஆட்டா விற்பனை மையங்களை மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். இதற்காக 2.5 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.