மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி - பட்டியலில் இடம்பெறாத தமிழ்நாடு, கேரளா!
கடந்தாண்டு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “இன்று மத்திய அமைச்சரவையின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு 1554.99 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கெனவே ரூ.18,322.80 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலின்படி, ஆந்திரவுக்கு ரூ.608.08 கோடி, நாகாலாந்துக்கு ரூ.170.99 கோடி, ஒடிசாவுக்கு ரூ.225.24 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.231.75 கோடி, திரிபுராவுக்கு ரூ.288.93 கோடி கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில், கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண நிதிக்கான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இடம்பெறவில்லை. கடந்தாண்டு நவம்பர் மாதம் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.