தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.169.9 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.169.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
டெல்லியில் மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை, அமைச்சர் ராஜேந்திரன் நேற்று சந்தித்து தமிழ்நாடு சுற்றுலா தலம் மேம்பாடு, பாரம்பரிய கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் மறுசீரமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு சுற்றுலாத் துறை தொடர்பான கோரிக்கை மனுவினையும் வழங்கினார்.
கீழ்க்காணும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவிகளை விரைவாக வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டது.
1).மாகாபலிபுரம் கடற்கரை கோயிலில், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கான ரூபாய் 30.02 கோடி.
2). நீலகிரி மாவட்டம் பைக்கராவில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.28.3 கோடி.
3).மாகாபலிபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.99 கோடி.
4). உதகை தேவலாவில் பூந்தோட்டம் அமைத்திட 72.58 கோடி.
5). ராமேஸ்வரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ. 99 கோடி ரூபாய்.
6). எட்டு நவகிரக கோயில்களில் பிரசாத் திட்டத்தின் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.44.95 கோடி.
7). தமிழகத்தில் உள்ள மராட்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் பாளையக்காரர்கள் எழுப்பிய பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்தல், புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.3000 கோடி.
8). சுற்றுலாத்துறை வளர்ச்சியினை மேம்படுத்த ரூ.1200 கோடி
இந்த கோரிக்கைகளை விரைந்து பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர் ராஜேந்திரன் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, மாகாபலிபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ. 99.67 கோடியும், உதகை தேவலாவில் பூந்தோட்டம் அமைத்திட ரூ. 70.23 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.