மத்திய அரசு மத அரசியல் செய்கிறது - திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!
மத்திய அரசு மக்களை பிரித்தாள்வதோடு ஒற்றுமையை குலைத்து, மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் செய்வதாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் ; பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி சந்திப்பு!
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான குழுவினர், தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் முனைவோர், மீனவர், விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி கோரிக்கைகளை கேட்டு அறிந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் கன்னியாகுமரி நெல்லை தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினருடன் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் மனோ தங்கராஜ் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி கூறியதாவது:
மத்திய அரசு மக்களை பிரித்தாள்வதோடு ஒற்றுமையை குலைத்து, ஒவ்வொரு மாநிலத்திலும் அமைதியை அழித்து மக்கள் பிரச்னையை குறிப்பாக வேலைவாய்ப்பு, மீனவர் பிரச்னை, விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றை மறக்கடிக்க செய்யும் விதமாக மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் செய்கிறது.
எனவே நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோரிக்கைகள் நிறைவேற அது தமிழ்நாடு அரசு தொடர்பான நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி மத்திய அரசு தொடர்பான நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, அந்த கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறவுரைப்படி, விவசாயிகள், மீனவர்கள், தொழில் முனைவோர் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டு அதனை செயல்படுத்த முதலமைச்சர் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார். இதன்மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உருவாக்க வேண்டும்"
இவ்வாறு திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.