இராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி ராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை பிச்சாவரம் பாளையக்காரர் சூரப்ப சோழனார் தலைமை ஏற்று நடத்தினார்.
இவ்விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜராஜ சோழனின் திருவுருவ படம் நடராஜர் கோவில் ஆயிரம் கால் மண்டபம் முகப்பு வாயிலிருந்து சிவ வாத்தியங்கள் முழங்க சிலம்பாட்டம் ஆடியபடி ஊர்வலமாக தில்லை காளியம்மன் கோவில் வரை வீதியுலாவாக கொண்டு வரப்பட்டது. மேலும், தில்லை காளியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக ஆடி திருவாதிரையில் பிறந்த மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவினை ஒட்டி தில்லை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இரண்டு பேரரசர்களுக்கு விழா நடத்தி சிறப்பு
செய்துள்ளனர்.