சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையை வேடிக்கை பார்க்க முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது, “தமிழ்நாட்டில் 8-ம் வகுப்பு வரை அணைத்து மாணவர்களும் தேர்ச்சி என வைத்துள்ளோம். அதேபோல் 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு நடத்தப்படுகிறது.
ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் உள்ளன. மேலும் அந்த தேர்வுகளில் குழந்தைகள் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் எடுக்காவிட்டால் பெயில் ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும்.
தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் சிபிஎஸ்இயின் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் மூலம் வரலாற்றை மறைக்க முயற்சி செய்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால் தான் தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
எனவே சிபிஎஸ்இ பள்ளிகள், 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை பெயில் ஆக்குவதாகக் கூறினால் பெற்றோர் அதில் கையெழுத்திடக் கூடாது. மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிப்பதோடு மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். சிபிஎஸ்இயின் இந்த நடவடிக்கையை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திமுக அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. மாநில கல்விக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். தரமான கல்வி வழங்க புது புது திட்டங்களை உருவாக்கி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.