Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை !

டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
12:21 PM Mar 12, 2025 IST | Web Editor
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,

Advertisement

"தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து புதிது புதிதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் நிலையில் அவற்றை முழுமையாக மறைத்து விட்டு, திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 5 தனியார் மது ஆலைகளில் கடந்த 7ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் விவரங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. அவற்றில் குறைந்தது ரூ.1000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் பெருங்கடலின் ஒரு துளி தான் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக தி ஃபெடரல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவிர தமிழகத்தின் மது விற்பனையில் 40% கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்படுவதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதாகவும் தி ஃபெடரல் கூறியுள்ளது. ஊழல் பணம் ரூ.1000 கோடியில் சிறு பகுதி மட்டும் தான் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சென்றிருப்பதாகவும், மீதமுள்ள பணம் யாருக்கு சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக தி ஃபெடரல் தெரிவித்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளியாகியுள்ள செய்திகள் எதுவும் புதிதல்ல. இந்தியாவில் ஊழல் ஊற்றெடுக்கும் துறைகளில் முதன்மையான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தான் என்பதை பல ஆண்டுகளாகவே பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழல்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் மேலாக மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் மட்டும் தினமும் ரூ.10 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 650 கோடி வரை ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இது தவிர மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகளுக்கு பெட்டிக்கு ரூ.50 வீதம் கையூட்டாக பெறப்படுவதாகவும், இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை ஆட்சியாளர்களுக்கு கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு உண்டு. இது குறித்து விசாரிக்க கடந்த காலங்களில் பாமக பல முறை வலியுறுத்தியிருக்கிறது.

இவை அனைத்துக்கும் மேலான குற்றச்சாட்டு என்னவென்றால், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் 50 விழுக்காட்டுக்கு கலால் வரியும், விற்பனை வரியும் செலுத்தப்படுவதில்லை என்பது தான். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த குற்றச்சாட்டை நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் உறுதி செய்திருக்கிறார். 2022&ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர்,‘‘தமிழகத்தில் ஆயத்தீர்வை வளையத்திற்கு வெளியே விற்பனை செய்யப்படும் மதுவின் அளவு மிகவும் அதிகம்.

அதிகபட்சமாக 50% அளவுக்கு இது இருக்கலாம். சிறந்த தொழில் நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பை பயன்படுத்தி இதைத் தடுப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்’’என்று கூறியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டை தமிழக அரசு இன்று வரை மறுக்கவில்லை. வரி செலுத்தப்படாமல் மது வணிகம் செய்யப்படுவதை தடுப்பதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியானால், இன்று வரை கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தொடர்வதாகத் தான் பொருள். இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன. ஆனால், 20 ஆயிரத்திற்கும் கூடுதலான சந்துக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தான் வரி செலுத்தப்படாத மதுப்பாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. சந்துக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாமக பலமுறை வலியுறுத்தியும் கூட அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சந்துக் கடைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது பொய்வழக்கு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் வாயிலாக சந்துக்கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதையே திராவிட மாடல் அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.

டாஸ்மாக் வணிகத்தால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை விட, டாஸ்மாக் முறைகேடுகளால் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் லாபம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் டாஸ்மாக் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. இப்போதும் கூட டாஸ்மாக் ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியிருக்க முடியாது.

டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள மூல வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. ஆனால், அந்த மூல வழக்கில் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த எந்த உண்மையும் வெளிவர வாய்ப்பில்லை.

அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ள ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம் ஆகும். தமிழகக் காவல்துறை அதை செய்யும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
allegationsAnbumani RamadossCBIcorruptioninvestigateSTATEMENTTASMAC
Advertisement
Next Article