தமிழ்நாட்டிற்கு 2.5 டிம்சி தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் கேரளா மற்றும் கர்நாடக அதிகாரிகள் காணொலி மூலம் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், அணைகளில் நீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் இருந்து 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா திறந்து விட உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் ஆரம்பத்திலேயே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.