புல்லட் ஓட்டியதற்காக தலித் மாணவன் கைகளை வெட்டிய சாதியக் கொடூரம் : ஜோதிமணி எம்.பி கண்டனம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலபிடாவூரை சேர்ந்த அய்யாசாமி (21). இவர் சிவங்கையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் மூன்றாமாண்டு பயின்று வருகிறார். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர் நேற்று கல்லூரி முடிந்து, வீட்டுக்கு தனது புல்லட் பைக்கில் திரும்பியுள்ளார். அப்போது நடுவழியில் இடைமறித்த ஒரு சமூக இளைஞர்கள், அய்யாசாமியின் சாதிப் பெயரை சொல்லி திட்டி, “நீ எல்லாம் புல்லட்டில் வருவாயா” என கேட்ட படியே திடீரென மறைத்து வைத்திருந்த வாளால் அவரை வெட்ட முயன்றுள்ளனர்.
அச்சமடைந்த அய்யாசாமி தடுக்க முயன்றபோது இரண்டு கைகளிலும் வாளால் வெட்டு விழுந்ததுள்ளது. இதில் அவரின் வலது கை கடுமையாக வெட்டுக் காயம் அடைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பி சென்று பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்பு பெற்றோர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து அய்யாசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடக்கூடாது என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
“தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் புல்லட் ஓட்டினார் என்பதற்காக, அவரது கைகளை வெட்டும் சாதியக் கொடூரம் நெஞ்சை உறையச் செய்கிறது. இந்த கொடுஞ்செயலைக் கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
இது மாதிரியான கொடுஞ்செயலை செய்வதற்கான தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்த அப்பட்டமான சாதிவெறி குறித்து, ஒரு சமூகமாக நாம் வெட்கித் தலைகுனிவதோடு, இந்த சாதி வெறியர்களுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் கடுமையான நிலைபாட்டை எடுக்கவேண்டும்.
சட்டம் மிகக் கடுமையாகவும், விரைவாகவும் எதிர்வினையாற்ற வேண்டும். இம்மாதிரியான குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்தின் பிடியிலிருந்தும், சமூகத்தின் கூட்டு மனசாட்சி மற்றும் அற உணர்விலிருந்தும் எக்காரணத்தை முன்னிட்டும் தப்பித்துவிடக் கூடாது.
அய்யாசாமியின் அப்பாவின் தம்பியான பூமிநாதனை இரண்டாவதாக திருமணம் செய்து, அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அந்த கிராமத்தில் சற்று வசதியாகவும், புதிதாக வீடுகள் கட்டியும்
வாழ்ந்து வந்துள்ளார்கள். இது அதே கிராமத்தில் வாழ்ந்து வந்த மற்ற சமூகத்தை
(அகமூடையார் ) சேர்ந்த இளைஞர்களான வினோத், ஆதி ஈஸ்வரன் ,வல்லரசு இவர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பூமிநாதன் (சித்தப்பா) புதிதாக
புல்லட் பைக் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய மறுநாளே இவர்கள் அந்த பைக்கை
அடித்து உடைத்து உள்ளார்கள். பூமிநாதனையும் அடிக்க முயற்சித்துள்ளார்கள்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். பிறகு ஊரில் வைத்து பேசி முடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை இளைஞர் கல்லூரி முடித்துவிட்டு வீடு வரும் பொழுது, வீட்டின் அருகே மறித்து “இந்த ஜாதியில் இருந்துகிட்டு எங்க முன்னாடியே நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்” என்று கூறி, இளைஞரின் இரண்டு கைகளையும் வெட்டி உள்ளார்கள். கை இருந்தால்தானே ஓட்ட முடியும் என்ற நோக்கத்துடன் அவர் கையை வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரை அழைத்துக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மறுபடியும் பூமிநாதனின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்கள். இதில் ஜன்னல், கதவு, ஸ்விட்ச் போர்டு, வீட்டின் ஓடு சேதம் அடைந்துள்ளது.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, இதில் தொடர்புடைய வினோத்,ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு மூன்று பேரையும் கைது செய்து சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர். இதில் வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது காயம்பட்ட அய்யாசாமிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரண்டு
கைகளையும் சேர்ப்பதற்காக அறுவை சிகிச்சை நடந்து வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.