கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் கூடாது - இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!
இந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில பொதுச்செயலர் ஆறுமுக நயினார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில்,
“இந்து சமய அறநிலையை துறையின் ஆணையர் தரப்பில், கோயில் திருவிழாக்களின் போது குறிப்பிட்ட சாதியின் பெயரோ, சமுதாய குழுக்களின் பெயரோ குறிப்பிடப்படக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் மற்றும் பாபநாசம் சுவாமி கோயில் பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்கள் அச்சிடப்படாது என செயல் அலுவலர் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து கோயில்களிலும் அதை பின்பற்ற பொதுவான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. அதை தவறாகப் புரிந்துகொண்டு ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அம்பாசமுத்திரம் கோயிலில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றி பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டும். அதோடு ஆணையரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டும் வழக்கை ஒத்தி வைத்தனர்.