"அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது" - உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து, கள்ளச்சாராய உற்பத்தி மையமாக கருதப்படும் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு ஏற்கெனவே இரண்டு முறை விசாரணைக்கு வந்தது.
அப்போது முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று மலைவாழ் மக்களின் தற்போதைய நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். மேலும், அப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கல்வி, மருத்துவம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு அரசு விரைந்து செயல்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள், ஏற்பாடுகள் குறித்து அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், அந்த பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 150 பள்ளிகள் செயல்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் பட்டியலின பள்ளிகள் என குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை மாற்றியது போல பள்ளி உள்ள சாதி பெயரையும் நீக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை நீதிபதி வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.