தனியார் பள்ளிகளில் RTE சட்டப்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு - பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!
மதுரையைச் சேர்ந்த ரணியன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வியை, கல்வி பெறும் உரிமை சட்டம் உறுதிப்படுத்தியது. அதன்படி தனியார் பள்ளிகள் 25% இடத்தை பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்க வேண்டும். CBSE மற்றும் ICSE பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான CBSE பள்ளிகளில் இந்த இட ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதில்லை. அரசு தரப்பில் அதற்கான கட்டணம் முறையாக செலுத்தப்படுவதில்லை என காரணம் கூறப்படுகிறது. அதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எவ்விதமான அறிவுறுத்தல்களும் இல்லை என முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து CBSE மற்றும் ICSE பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் அமர்வு, “தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர், CBSE-யின் மண்டல அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர், தனியார் பள்ளிகளின் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.