சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சென்னை தீவுத்திடலைச் சுற்றி, பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் பந்தயம் நடத்தத்தடை கோரிய வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு. சட்ட அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் இல்லை. இந்த போட்டியை நடத்தும் தனியார் நிறுவனம் முதலீடு செய்யும் 200 கோடி ரூபாய் என்பது விளம்பரம், அலங்கார மின் விளக்குகள், உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. மேலும் பந்தயம் நடத்துவது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விதி எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பந்தயம் நடத்துவதன் மூலம் எவ்வளவு வருவாய் திரட்டப்படுகிறது? அதன்மூலம் யார் பயனடைகின்றனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், கார் பந்தயம் நடத்துவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதை நீதிமன்றம் ஆராய முடியாது. அரசு குறைவாகவே செலவிடுகிறது. டிக்கெட் விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. டென்னிஸ் போட்டி போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தவும் அரசு தான் ஏற்பாடு செய்கிறது என்றார்.
மேலும், “பந்தயம் நடத்தும் நிறுவனம் தரப்பில், கார் பந்தயம் நடத்த தங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதே தவிர, எந்த பொதுநலனும் இல்லை. ஹைதராபாத்தில் கார் பந்தயம் நடத்தியதன் மூலம் அரசுக்கு 630 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது” என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.