பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு - முந்தைய விதிகளை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு..!
பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கில் இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்டவிதிகளை பின்பற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா , எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு விசாரணை மேற்கொண்டது.
மனுதாரர்கள் தரப்பில் பட்டாசுகளை வெடிப்பது தொடர்பாக விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள் " இது தீபாவளி நேரம் மட்டும் அல்ல தேர்தலும் நடக்கிறது. காற்று மாசுவை தடுப்பது என்பது நீதிமன்றத்தின் கடமை மட்டும் அல்ல மாறாக அனைவரின் கடமை ஆகும். மேலும் இந்த விவகாரத்தில் பொதுவான உத்தரவை மட்டுமே நாங்கள் பிறப்பிக்க முடியும். எப்படி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை அறிவுறுத்த முடியாது.
தற்போதைய காலகட்டத்தில் மூத்தவர்களை விட பள்ளி குழந்தைகளே அதிக பட்டாசுகளை வெடிக்கின்றனர். பட்டாசு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும்" என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.