பட்டியலின அதிகாரியை காலில் விழவைத்த விவகாரம் - திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் வழக்கு பதிவு!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, அந்த அதிகாரியடம் தன் வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா அவரை ஒருமையில் திட்டியுள்ளார். மேலும் நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் முனியப்பன் குறித்து முறையிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து திண்டிவனம் நகராட்சி ஆணையர் அறைக்கு அந்த அதிகாரியை அழைத்த நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை கேட்க சொல்லியிருக்கிறார். அப்போது அருகில் நின்றிருந்த அந்த அதிகாரி இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யா ராஜாவின் காலில் திடீரென விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் பரவிய அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இச்சம்பவத்தை அறிந்த திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் 20-வது ம்வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா நகரமன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம் காவல்துறையானது, திமுக கவுன்சிலர் ரம்யா அவரது கனவர் மருவூர் ராஜா மற்றும் நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.