பாமக பிரமுகர் கொலை வழக்கு | தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ சோதனை!
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளரான ராமலிங்கம் கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்தன் காரணமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறிஞ்சி மலையை சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அவர்கள் தனியாக வழக்கு பதிவு செய்து மொத்தம் 13 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் 5 பேர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 10 இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறையில் உள்ள PFI அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், திருவாரூரில் உள்ள PFI அமைப்பின் வழக்கறிஞர் வீட்டிலும், திருச்சி திருவெறும்பூரில் உள்ள எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.