For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைப்பு!

09:51 PM Apr 29, 2024 IST | Web Editor
பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைப்பு
Advertisement

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும்,  உயர்கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவர்.  இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல் ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.  இவரால் குறி வைக்கப்பட்ட மாணவிகள்,  நிர்மலா தேவி பேசியதை ரெகார்ட் செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்ய, அதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த நேரம்,  அவர் மாணவிகளிடம் பேசிய ஃபோன் உரையாடல்,  சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அருப்புக்கோட்டை தன்னார்வ அமைப்பு, இந்திய மாணவர் சங்கம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் போராட்டம்,  நீதிமன்ற வழக்குகளுக்குப் பின்னர் போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதையும் படியுங்கள் : மேட்டுப்பாளையம் அருகே 46 குடிசை வீடுகள் தீயில் கருகி சேதம்!

இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த,  சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.  இதற்கிடையே ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கில் இணைத்துப் பேசப்பட்டதால்,  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் தனியே ஒரு விசாரணைக் குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.  இதையடுத்து 2018 ஏப்ரலில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.  இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுப்பட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன்,  ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பலர் மீது குற்றச்சாட்டுகளும்,  சந்தேகங்களும் எழுந்த நிலையில், இறுதியாக நிர்மலாதேவி,  முருகன்,  கருப்பசாமி ஆகியோர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி  நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.  இதனையடுத்து,  நீண்ட நாட்கள் சிறையில் இருந்த நிர்மலா தேவி,  முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில்,  கொரோனா ஊரடங்கால் விசாரணை தாமாதமானது.  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்,  விபச்சார தடுப்புச் சட்டம்,  தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில்,  ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது.  ஆனால் முருகன் மற்றும் கருப்பசாமி மட்டுமே ஆஜரான நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், இன்று பேராசிரியை நிர்மலாதேவி,  பேராசிரியர் முருகன்,  ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

இதையும் படியுங்கள் : குபேரா படத்தின் புது அப்பேட் கொடுத்த படக்குழு!

வழக்கை விசாரித்த நீதிபதி,  முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.  மேலும் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்த நீதிபதி,  தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.  இன்றே தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்ட நிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

நிர்மலா தேவிக்கு வழங்கப்படும் தண்டனை விபரங்கள் நாளை பிற்பகல் 2:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்து இருந்த நிலையில், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இருந்து நிர்மலா தேவி மதுரை மத்திய சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
Advertisement