காவல்நிலைய விசாரணைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கு - காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு சிறை தண்டனை..!
மதுரை மாநகர் கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயா என்பவரது மூத்த மகன் முத்து கார்த்திக்(17). இந்த சிறுவன் கடந்த 2019 ஆம் ஆண்டு குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விசாரணையின் போது காவலர்கள் முத்துகார்த்திக்கை கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தனது மகன் இறப்புக்கு காரணமான மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஜெயா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முத்து கார்த்திக் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
அதன் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் மதுரை எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜோசப்ஜாய் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் சாட்சிகளை ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ஆய்வாளர் பிரேமசந்திரன், சார்பு ஆய்வாளர் கண்ணன் மற்றும் ஆய்வாளர் அருணாசலம் ஆகிய மூவரையும் இந்த வழக்கில் கூடுதலாக சேர்த்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், தற்போது ஆய்வாளராக பதவியில் உள்ள அருணாசலத்தை சஸ்பெண்ட் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், உடற்கூராய்வின் போது காயங்களை மறைத்து அறிக்கை அளித்த அரசு மருத்துவர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவமனை மருத்துவ அலுவலர் (RMO ) ஸ்ரீலதா மீதும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறபித்துள்ளனர்.