உண்மையை மறைத்து வழக்கு - மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் “எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அந்த சான்றிதழ் மூலமாக அந்த பெண் வேலை பெற்று உள்ளார். சான்றிதழை வழங்குவதற்கு முன்பாக அந்த பெண் தகுதியானவரா என்பதை அதிகாரிகள் விசாரிக்கவில்லை.
எனவே பெண்ணுக்கு வழங்கிய சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். அதனடிப்படையில் பெறப்பட்ட வேலையில் இருந்து அந்த பெண்ணை நீக்க
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.
என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி, மனுதாரர் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார். இதில் எந்த பொது
நலமும் இல்லை, எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் அதே கோரிக்கையுடன் இந்த வழக்கை மனுதாரர் மீண்டும் தொடர்ந்தது ஏற்புடையதல்ல என வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் இந்த நீதிமன்றத்தையும், சட்ட விதிகளையும் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. எனவே மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மதுரை உயர் நீதிமன்ற இலவச சட்ட உதவி
மையத்துக்கு 2 வாரத்தில் மனுதாரர் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.