For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்க உத்தரவிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்!

02:13 PM Apr 10, 2024 IST | Web Editor
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்க உத்தரவிட முடியாது   சென்னை உயர் நீதிமன்றம்
Advertisement
தபால் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில்,  தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு

தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட
முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

Advertisement

மக்களவை தேர்தலில்,  ராணுவம்,  துணை ராணுவப்படை வீரர்கள்,  தேர்தல் பணியில்
ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள்,  ஊடகத்தினர்,  உடல் நலக்குறைவால்
பாதிக்கப்பட்டவர்கள்,  மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு
செலுத்த அனுமதியளிக்கப்படுகிறது.

இதில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை என்றும்,  அவர்களையும்
சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை கோட்டத்தில்
கண்காணிப்பாளராக பணியாற்றும் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்திருந்தார்.

ரயில் ஓட்டுனர்கள்,  ரயில் நிலைய அதிகாரிகள்,  பயணச்சீட்டு பரிசோதகர்கள் வாக்கு
செலுத்த விடுப்பு எடுக்க இயலாது எனவும்,  தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தபால் வாக்கு பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக விண்ணப்பிக்கும்படி,  தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியும்,  கடைசி நாளான பிப்ரவரி 20ம் தேதிக்குள் தெற்கு ரயில்வே தரப்பில் விண்ணப்பிக்கவில்லை.  தபால் வாக்குப்பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் மார்ச் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு,  வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கூடுதலாக தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க முடியாது என்பதால்,  தபால் வாக்களிக்க தெற்கு ரயில்வே ஊழியர்கள் உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே தரப்பில்,  நேரில் வாக்களிக்க ஏதுவாக ஊழியர்களுக்கு விடுப்பு
வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  கடைசி நேரத்தில் கூடுதல் தபால் வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.   மேலும், ஊழியர்கள் நேரில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி தெற்கு ரயில்வேக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement