அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு - விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் போட்டியிட்டார். இவர் கடந்த 2021 மார்ச் 27 ஆம் தேதி, தொகுதியில் உள்ள கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறி, திமுக கொடி கம்பங்களை நட்டு, தோரணங்கள் கட்டி பிரச்சாரம் செய்ததாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதேபோல் சிவகங்கை மாவட்டம், மானா மதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜ கண்ணப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறி, 15 வாகனங்களில் பிரச்சாரம் செய்ய வந்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் கோரியும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணைக்கு அமைச்சர் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் , வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என மறுத்துள்ளார். மேலும், மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.