அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு - விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. மேலும் இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது.
மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த 12.09.2022 அன்று அனுப்பியது . ஆனால் இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்விதபதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என அமைச்சர் ரகுபதி கடந்த ஜூலை மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா முறைகேடு வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக உச்சநிதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் தாக்கல் செய்த அறிக்கை மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், கடந்த 13ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆளுநர் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.