மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை - தேர்தல் ஆணையம் மறுப்பு!
ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் இன்று (மார்ச் 27) ஆகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனால் விறுவிறுப்பாக வெட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த சூழலில், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் அதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.