For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி - எதிர்கட்சிகள் கண்டனம்!

03:29 PM Nov 07, 2023 IST | Web Editor
பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி   எதிர்கட்சிகள் கண்டனம்
Advertisement

பாட்னாவில் ஊதிய உயர்வு கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement

பீகார் மாநிலத்தில் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 5000 ரூபாய் என்ற ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தங்களுக்கு, ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் எனவும் தங்களை அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் பாட்னாவில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பீகார் போலீசார் அவர்களின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். மேலும் அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவமான ஊதிய உயர்வு வழங்கக் கோரியும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். தொழிலாளர்களுக்கு பணிக்கொடை பலன் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பீகார் அரசு அதைப் பரிசீலிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். “ரூ.5000 வைத்து யாரால் உயிர் வாழ முடியும்? உரிமைகளைக் கேட்டால் இப்படி மோசமாக நடத்தப்படுகிறோம். எங்களுக்கான கௌரவமான ஊதிய உயர்வு வழங்காதவரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம்” எனப் போராட்டக்காரர்கள் கூறினர்.

அங்கன்வாடி ஊழியர்களின் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜக தலைவர் ஷேஜாத் பூனாவல்லா, பீகார் அரசைக் கடுமையாக சாடினார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “காட்டாட்சியாக இருந்த நிதிஷ் குமாரின் அரசு தற்போது தடியடி அரசாக மாறியுள்ளது. ஐக்கிய ஜனதா தள அரசில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும் இப்படி கொடூரமாக ஒடுக்கப்படுகின்றன. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி அங்கன்வாடி ஊழியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து பிரிவினரும் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement