#Andhrapradesh | தடியடி திருவிழா - 70 பேர் படுகாயம்... வீட்டுக்காவலில் 148 பேர்!
ஆந்திராவில் தடியடி திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட்டு மலையில் மல்லேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி இரவன்று, தடியடி திருவிழா நடைபெறும். தேவர்கட்டு மலையை சுற்றியுள்ள 24 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த திருவிழாவை கோயிலில் கொண்டாடி மகிழ்வர். கொண்டாட்டத்தின் போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொள்வர்.
இதனால் திருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்படுவதால், திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக, அம்மாநிலத்தின் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த அம்மாநில போலீசாரும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், நாங்கள் இந்த திருவிழாவை நிறுத்த மாட்டோம் என அந்தப் பகுதி பொதுமக்கள் உறுதியாக கூறுகின்றனர். இவ்வாறு பல்வேறு தடுப்பு முயற்சிகளையும் தாண்டி, இந்த திருவிழா அதன் போக்கில் தொடர்ந்து பொதுமக்களின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த தடியடி திருவிழா நடைப்பெற்றது.
மது அருந்திவிட்டு திருவிழாவில் கலந்துகொண்டு, யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்பதற்காக நேற்று மாலை முதலே 24 கிராமங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். மது அருந்திவிட்டு வந்த 148 பேரை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர். தொடர்ந்து நடந்த தடியடி திருவிழாவில் 70 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினர்.
திருவிழாவை கண்காணிப்பதற்காக 100 சிசிடிவி கேமராக்கள், 700 LED லைட்டுகள், 5 ட்ரோன் கேமராக்கள் ஆகியவற்றை போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.