திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திருப்பூர் மாவட்டம் சிக்கனுத்து கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணியில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் ஏற்படுகிறது என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது பெயரளவுக்குக் கூட இல்லை என்று தானே பொருள். தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்; தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? தமிழகத்தில் யாருமே அச்சமின்றி வாழ முடியாது என்ற நிலை நிலவுவதையே இந்தக் கொலை காட்டுகிறது.
தமிழ்நாட்டில் காவல்துறைக்கு பொறுப்பு வகிப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றாலும் கூட, காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் இல்லை; காவல்துறைக்கு ஏராளமான எஜமானர்கள் உள்ளனர்; முதலமைச்சரின் குடும்பத்தில் உள்ளவர்களும், முதலமைச்சரை சுற்றி வளையம் அமைத்திருப்பவர்களும் காவல்துறையின் அதிகார மையங்களாக திகழ்கின்றனர்; அதனால் தான் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் தடுமாறுகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை காவல் அதிகாரி சண்முகவேலின் படுகொலை உறுதி செய்திருக்கிறது.
காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் ஆணையம் அமைத்து பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தப் போவதில்லை என்றால் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவழித்து ஏன் ஆணையம் அமைக்க வேண்டும். அதற்கு பருத்தி மூட்டை கிடங்கிலேயே இருந்திருக்கலாமே?
சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி, மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தத் தவறியதற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.