ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேள்வி!
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பிய தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரித்து வருகிறது.
மத்திய அரசு தரப்பு, “மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களில் நீதிமன்றம் எந்த அளவுக்கு உத்தரவிட முடியும் என்பது குறித்து ஆய்வுசெய்ய வேண்டும். மேலும், குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைக்கும் நேரங்களில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரமுடியுமா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் , மூன்று மாதத்திற்குள்ளாக மசோதா மீது முடிவெடுக்கவில்லை என்றால், அதற்கான காரணத்தை கூற வேண்டும் என குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் எப்படி கூற முடியும் ? குடியரசு தலைவர் முடிவை அறிவிக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று எப்படி உத்தரவிட முடியும் ? ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது, ஏன் ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக ஒருவர் நீதிமன்றத்தை அணுகி ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினால் ஒப்புதலை ரத்து செய்ய உத்தரவிட முடியுமா ?” என்று வாதிட்டனர்.
அப்போது தலைமை நீதிபதி, ”மசோதாவில் இருக்கும் சட்ட பிரச்சனைகள் குறித்து நீதிமன்றத்தின் முன்பு கேள்வி எழுப்ப முடியும் .அதனை ஆராய்வதற்கான உரிமையும் அதிகாரமும் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா மீது ஆளுநர் எத்தனை காலம் முடிவெடுக்காமல் அப்படியே வைத்திருக்க முடியும் ? என்பதுதான் இந்த வழக்கில் கேள்வி.
அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் முதலில் 6 வாரங்களில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்று விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் அது "As Soon As" என்று குறிப்பிடப்பட்டது. அப்படியானால் As Soon As என்பது 6 வாரங்களுக்கு மேல் நீடிக்க கூடாது என்பதுதான் பொருளாக கொள்ள முடியும். ஆளுநர்கள் ஆறு மாதம், ஒரு வருடம் என்று மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. மேலும் ஆளுநரிடம் பதில் கேட்பதில் தவறில்லை, ஏனெனில் ஆளுநர் மத்திய அரசை பிரதிநிதித்துவபடுத்துபவர் இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது” என்று கருத்து தெரிவித்தார்.