பாஜக-வில் இணைந்தார் பதவி விலகிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய!
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பதவி விலகிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய பாஜக-வில் இணைந்தார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தவர் அபிஜீத் கங்கோபாத்யாய. இவர் கல்வி சார்ந்த பல்வேறு விவகாரங்களில் அளித்த தீர்ப்புகள், அந்த மாநிலத்தில் அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தன. அவர் நீதித்துறையைக் கைவிட்டு அரசியலில் புக வேண்டும் என்று ஆளும் திரிணமூல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். இதனை மெய்பிக்கும் வகையில் அவர் நீதிபதி பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார். கடிதத்தின் நகல்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பினார்.
இந்த நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய இன்று (மார்ச். 7) பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அபிஜீத் கூறியதாவது:
“இன்றைய நிகழ்வு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்னை வரவேற்ற விதம் அபாரமானது. ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தம்லுக் தொகுதியில் அபிஜீத் கங்கோபாத்யாய போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.