For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கேரளாவில் சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது...” - முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

08:08 AM Mar 12, 2024 IST | Jeni
“கேரளாவில் சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது   ”   முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி
Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர், மார்ச் 11-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சிஏஏ சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

நாட்டு மக்களை குழப்புவதற்காக தேர்தல் நெருங்கும் வேளையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, CAA தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவும், வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவதற்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குலைப்பதற்காகவுமே மத்திய அரசு இதைச் செய்துள்ளது. இந்த நடவடிக்கையை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும்.சங்பரிவார் அமைப்புகளின் இந்துத்துவா வகுப்புவாத கொள்கையின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க முடிகிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 31 டிசம்பர் 2014 அல்லது அதற்கு முன் இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் போது, அங்கிருந்து வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுப்பது அரசியலமைப்பை அப்பட்டமாக மீறுவதாகும். இது மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமையை வரையறுப்பதற்கு சமம். மனிதநேயம், நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் மக்களுக்கு இது ஒரு வெளிப்படையான சவால்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் சட்டமன்றம் கேரளா. கேரளாவில் என்பிஆர் அமல்படுத்தப்படாது என்று கேரள அரசு அறிவித்தது. சிஏஏ, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மஞ்சேஷ்வரில் இருந்து பரஸ்லா வரை மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டது. மக்களின் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், தனது வகுப்புவாத கொள்கையை செயல்படுத்துவோம் என்று சங்பரிவார் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

இதையும் படியுங்கள் : “CAA அமல்படுத்தப்பட்டதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது” - எடப்பாடி பழனிசாமி

இஸ்லாமிய சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள அரசு பலமுறை கூறியுள்ளது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும்.”

இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement