அடுத்த 7 நாட்களுக்குள் நாடு முழுவதும் சிஏஏ அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து இந்த சட்டம் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. எனினும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த சட்டம் இதுவரை அமலாகவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.
ஆனால், இந்தச் சட்டத்தில்இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019 டிசம்பரில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2020-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப் பேரவையில் சிஏஏக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி CAA, NPR மற்றும் NRC சட்டங்களை ஆகியவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். ஆனால் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை (திருத்த) சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மக்களவை எம்பியான சாந்தனு தாக்கூர் கூறியதாவது,
“அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. மதம், சமூகம் மற்றும் கொள்கைகளைக் கருத்தில் கொண்ட பிறகே சிஏஏ அமல்படுத்தப்படும். சிஏஏ சட்டத்தை திடீரென அமல்படுத்துவது நாட்டில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கலாம். தற்போது இந்த முடிவை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. சிஏஏ ஏழு நாட்களுக்குள் நாட்டில் அமல்படுத்தப்படும். நான் உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளேன். அதை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேச வேண்டிய அவசியமில்லை. இது மத்திய அரசின் பிரச்னை.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.