For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டம் - விதிமுறைகள் கூறுவது என்ன?

10:28 AM Mar 12, 2024 IST | Web Editor
குடியுரிமை திருத்தச் சட்டம்   விதிமுறைகள் கூறுவது என்ன
Advertisement

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், சிஏஏ சட்டத்தின் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.  மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  அதன்படி, விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில்,  மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து,  குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.  இந்தச் சட்டமானது,  வங்கதேசம்,  பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.  அதாவது இந்து,  கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,  சமணர்கள்,  பௌத்தர்கள்,  பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

இதையும் படியுங்கள் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இதையடுத்து, சிஏஏ விதிமுறைகளின் சில பின்வருமாறு :

  • இந்திய குடியுரிமை கோருவோர்,  அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 1 ஆண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும்.  அந்த 1 ஆண்டு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டுகளுக்கு குறையாமல் விண்ணப்பதாரர் இந்தியாவில் தங்கியிருந்தால்,  அவர் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவர்.
  •  விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவதாகவும் மற்றும் இந்தியாவை நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
  • இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்,  இந்திய குடியுரிமை பெற்றவரைத் திருமணம் செய்தவர்,  இந்திய குடியுரிமை பெற்றவரின் 18 வயதுள்குள்பட்ட பிள்ளை,  இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவர் ஆகியோர் தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சட்டபூர்வமாக இந்திய குடியுரிமை கோருவோர்,  தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால்,  'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டிருப்போம்',  'இந்திய சட்டங்களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்',  'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூர்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரர் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு,  தங்கும் அனுமதி,  வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு,  பிறப்புச் சான்றிதழ்,  திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர்,  சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.  ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோர் அதற்குத் தனயாக விண்ணப்பிக்க வேண்டும்.
Tags :
Advertisement