குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் - டிடிவி தினகரன் பேட்டி!
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அப்போது, குடியரசு துணைத் தலைவர் தேர்தல், தமிழக அரசியல் சூழல், மற்றும் தனது கட்சியின் எதிர்கால வியூகம் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவராக என்.டி.ஏ. கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். "அவர் 1999 நாடாளுமன்றத்தில் இருந்து எங்களுக்கு நல்ல நண்பர். இனிமையானவர், எல்லாரிடமும் எளிமையாகப் பழகக்கூடியவர். இப்போது ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எப்படிப் பழகினாரோ அதேபோன்று பழகக்கூடியவர். அவர் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராவது தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்," என்று அவர் சி.பி.ராதாகிருஷ்ணனைப் புகழ்ந்துரைத்தார்.
நடிகர் விஜய் எந்தெந்த கட்சியைப் பற்றிப் பேசினாரோ, அந்தந்த கட்சியினர் பதில் அளிப்பார்கள் என்று கூறி, விஜய் விவகாரத்தில் நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்தார். மேலும், சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தலைவர்களின் படங்களை பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு, "அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா, காமராஜர் போன்ற தலைவர்களைத் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அரசியல் செய்ய முடியாது," என்று அவர் பதிலளித்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் 108 வாகனம் தாக்கப்பட்டதை பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அதற்கு அவர்கள் நிச்சயமாகப் பதில் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
டிசம்பருக்குள் தமிழகத்தில் எத்தனை அணிகள் ஒன்று சேரப் போகிறது என்பது அனைவருக்கும் தெரிய வரும் என்று பேட்டியளித்ததன் மூலம், அ.ம.மு.க.வின் அரசியல் வியூகம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை அவர் ஏற்படுத்தியுள்ளார். "அம்மாவின் தொண்டர்கள் பல்வேறு சோதனைகளையும், பிரச்சினைகளையும் தாண்டி அ.ம.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் அ.ம.மு.க. முத்திரை பெறும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்து வரும் தேர்தல்களுக்காக சுற்றுப் பயணங்கள் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். டிடிவி தினகரனின் இந்த கருத்துக்கள், அ.ம.மு.க.வின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.