திருச்செந்தூரில் 3 நாட்களுக்குப் பின் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!
திருச்செந்தூரில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய பேருந்து சேவையால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தென் மாவட்டங்கள் அனைத்தும் தனித் தீவாக காட்சியளித்தன. அடிப்படை வசதிகள் இன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தண்ணீரின் வேகத்தாலும், தேக்கங்களினாலும் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் என அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
கனமழையால் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது, தண்ணீர் வடிய தொடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்புகிறது. போக்குவரத்தானது சீராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று (டிச.20) 3 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூரில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
பேருந்து சேவை தொடங்கியதில், பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்தும் சாத்தான்குளம் வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.