குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 51 பேர் உயிரிழப்பு !
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த பேருந்து பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த போது சாலையோர தடுப்பின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் சென்ற நிலையில் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாட்டமாலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து குவாட்டமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ, "மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை நியமித்தார். மேலும், "இதயத்தை உடைக்கும் செய்திகளைக் கேட்டு விழித்தெழுந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விபத்து குறித்து தகவல்தொடர்பு அமைச்சர் மிகுவல் ஏஞ்சல் டயஸ் கூறுகையில், "பேருந்து 30 ஆண்டுகள் பழமையானது என்றாலும், அதற்கு இன்னும் இயக்க உரிமம் இருப்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை நடைபெற்ற இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததுதான் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.