அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிற்றுண்டி திட்டம்! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
2024 - 25 ஆம் நிதியாண்டுக்கான பாட்ஜெட் தாக்கல் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது,
"அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ரூ.600 கோடி மதிப்பீட்டில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் போன்ற படிப்புகளை மேம்படுத்த ரூ.3,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44, 042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.200 கோடி மதிப்பில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் தரம் மேம்படுத்தப்படும்"
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.