"ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 25 கோடியில் சென்னையில் உயர்திறன் மையம்" - பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னையில் ரூ. 25 கோடியில் ஆட்டிசம் என அழைக்கப்படும் புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கம் உடையோருக்கான உயர்திறன் மையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது :
"புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கம் (Autism Spectrum Disorder) உடையோருக்குத் தொடுதிறன் சிகிச்சை, செயல்முறைப் பயிற்சி, இயன்முறைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி, தொழிற் பயிற்சி ஆகிய ஒருங்கிணைந்த மறுவாழ்வுச் சேவைகள் மட்டுமன்றி பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான ஆற்றுப்படுத்தல் சேவை. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ஆகிய அனைத்து சேவைகளையும் ஓரிடத்திலேயே பெற்றிடும் வகையில், புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கம் உடையோருக்கான உயர்திறன் மையம்(Centre of Excellence for Persons with Autism Spectrum Disorders) ஒன்று 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும்"
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.