பட்ஜெட் - ஜூன் 20ல் தொழில்துறையினருடன் நிதியமைச்சர் ஆலோசனை?
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஜூன் 20ல் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெகியாகியுள்ளது.
18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்றார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
2024-2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் ஜூலை 22ம் தேதி ஏழாவது முறையாக தாக்கல் செய்கிறார். இந்தியாவை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவதற்கும், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்கும் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
சரியான திட்டமிடல் மற்றும் விரிவான ஆய்வின் அடிப்படையில் பட்ஜெட்டை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார முன்னுரிமை மற்றும் சவால்களை தீர்க்கும் வகையில், பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக்காக மத்திய வருவாய் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்திக்க உள்ளாா். இந்த நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஜூன் 20ல் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெகியாகியுள்ளது.