மத்திய பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு அதிகரிப்பு!
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.01) தாக்கல் செய்யப்பட்டது. திருக்குறளுடன் பட்ஜெட் உரையை தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் உரையை வாசித்தார். சிறிது நேரம் கழித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
8ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையின்போது, வேளாண்துறை மற்றும் தொழில் துறைக்கான அறிவிப்புகளை நிர்மலா வாசித்தார். தொடர்ந்து வருமான வரி அறிவிப்புகளை அவர் அறிவித்தபோது, புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் மிடில் கிளாஸ் மக்களின் நலனை சார்ந்ததாக இருக்கும் என்றார். தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தபட்டுள்ளது என அறித்தார். புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும் என்றார். மூத்த குடிமக்களுக்கு வருமான வரி நிலைக்கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூறினார்.
தொடர்ந்து, 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், குறிப்பிட்ட 6 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுவதாக குறிப்பிட்டார். வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கான டிடிஎஸ் உச்ச வரம்பு ரூ.2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.