பட்ஜெட் தாக்கலில் மொராஜி தேசாயின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்...!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.
மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்ற இவர், இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.முன்னதாக நிதியமைச்சர்களாக இருந்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் 5 முறை நாடாளுமன்றத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் நிர்மலா சீதாராமன், இவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதேபோல் 1959 - 1964 ஆகிய ஆண்டுகளில் நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய், தொடர்ச்சியாக 5 முழு பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் 10 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
இதையும் படியுங்கள் : ஜனநாயகத்தை அழித்து வருகிறது பாஜக..! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன்மூலம், தொடர்ச்சியாக 5 முழு பட்ஜெட் மற்றும் 1 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற மொராஜி தேசாயின் 1959 - 1964 ஆண்டுக்கிடையிலான சாதனையை சமன் செய்கிறார்.