லிப்ட் கேட்ட பள்ளி மாணவனை மது குடிக்க சொல்லி கொடூர தாக்குதல் - 4 இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ், இந்துமதி தம்பதியரின் மகன் சபரி(15). சபரி சொக்கம்பாளையம் பிரிவு காந்தி அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சபரி பள்ளியில் இருந்து பாதியில் வீட்டிற்கு செல்வதற்காக பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களிடம் சபரி லிப்ட் கேட்டுள்ளார்.
அப்போது சிறுவனை அழைத்து சென்ற நான்கு மர்ம நபர்கள், சோமனூர் மதுபான கடையில் மதுவை வாங்கி மாணவனை குடிக்க சொல்லி கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து மது குடிக்க மறுத்த மாணவனின் முகத்தில் மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை வைத்துள்ளனர்.
மயக்கத்தில் இருந்த மாணவனை காடம்பாடி பகுதியில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்து சென்ற இளைஞர்கள் மீண்டும் மாணவனை குடிக்க சொல்லி தாக்கியுள்ளனர். இதில் மாணவனின் தலையின் பின்புறம் இரும்புராடல் அடித்ததோடு முகம், காது, வாய், தலை, முதுகு பகுதியில் பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த மாணவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.