காவல் நிலையத்திலேயே தங்கையின் கணவனை கத்தியால் குத்திய அண்ணன்... குத்திய குத்தில் உடைந்த கத்தி - நடந்தது என்ன?
ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையின் போதே தங்கையின் கணவனை கத்தியால் குத்திய அண்ணனால் பரபரப்பு.
ஆவடி காமராஜர் நகர், தாமரை தெருவைச் சேர்ந்தவர் குரு சத்யா (32). ஓட்டுநராக பணிபுரியும் இவர் திவ்யா (24) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் குரு சத்யாவுக்கு, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன்
கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யாவுக்கும், திவ்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, திவ்யா விவாகரத்து கோரி பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே தாய் வீட்டில் தங்கியுள்ள திவ்யாவிடம் சென்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் குருசத்யா.
ஆத்திரமடைந்த திவ்யா ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரும் வழக்கு விசாரணைக்கு சென்ற போது குரு சத்யா, திவ்யாவை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திவ்யாவின் அண்ணன் மகேஸ்வரன் (26), காவல் நிலையத்தின் உள்ளேயே குரு சத்யாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார். பாதி கத்தி முதுகிலேயே சிக்கிய நிலையில் அவரை மீட்ட மகளிர் போலீசார், சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக முதுகில் பாதி உடைந்த கத்தியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பிய மகேஸ்வரனை கைது செய்த ஆவடி போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்தில் வைத்தே ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.