இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்!
இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவெல்லா பிரேவர்மேனைப் பிரதமர் ரிஷி சுனக் நீக்கினார்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதாகக் காவல்துறையினர் மீது சுவெல்லா பிரேவர்மேன் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பரவலான கோபமும் அதிருப்தியும் அவர்மீது நிலவியது. அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக இன்று அவர் பதவியிலிருந்து விலகியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சுவெல்லாவை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என சுனக்கிற்குக் கடும் நெருக்குதல்கள் இருந்தன. கடந்த வாரம் வழக்கத்துக்கு மாறாக மிக மோசமான விதத்தில், லண்டன் காவல்துறையினர், 'பாலஸ்தீன ஆதரவாளர்களின் சட்ட மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சுவெல்லா பிரேவர்மன் குற்றம் சாட்டியிருந்தார்.
காஸாவில் சண்டை நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை 'வெறுப்புணர்வாளர்கள்' என்றும் குறிப்பிட்டார். லண்டனில் கடந்த நேற்று முன்தினம் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியின்போது, காவல்துறையினருடன் தீவிர வலதுசாரியினர் கைகலப்பில் ஈடுபட்டனர். பதற்றத்தை சுவெல்லா பிரேவர்மேன்தான் தூண்டிவிடுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.