“தேசிய அளவில் மதுவிலக்கு என்பது மக்களை ஏமாற்றும் செயல்” - #Ramadoss!
“தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசநாயகே ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் கொண்டவர். இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்தவர். இவரால் இலங்கையில் சிங்களவர் ஈழத் தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண முடியாது.
இலங்கை அரசின் 13-ம் சட்டத்திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இந்தியா வலியுறுத்தியும் எந்தப்பயனும் இல்லை. இலங்கை சீனாவுக்கு சாதகமான கொள்கையை கடைபிடிப்பது கவலையளிக்கிறது. ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணவும், போர்க்குற்றத்துக்கு காரணமான அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்தவும், இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியா- இலங்கை வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேசிய அளவில் மதுவிலக்குக் கொள்கை வகுப்பப்பட வேண்டும்; அவ்வாறு வகுக்கப்பட்டால் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் தயார் என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார்.
இது போகாத ஊருக்கு வழி காட்டும் செயலாகும். மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுக்கடைகளை திறப்பது, மூடுவது, மது ஆலைகளை திறப்பது, மூடுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு தான் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மாறாக, மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை வகுக்க வேண்டும்; தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அமைச்சர் முத்துசாமி கூறுவது தவறானது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதை மீட்பு மையங்களை அமைத்தல், கள்ளச்சாராயத்தைத் தடுக்க தனிப்படைகளை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் தமிழக அரசு நினைத்தால் அடுத்த வாரத்திலிருந்து கூட மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். மதுவுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வரும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது.
சென்னை அண்ணா நகரில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் வீடுகளில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தமிழ்நாட்டில் சட்டத்தின்படி தான் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.