பிரிக்ஸ் அமைப்பு ரத்தக் காட்டேரி போல செயல்படுகிறது - டிரம்ப் ஆலோசகர் விமர்சனம்!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி அமெரிக்காவில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை 50% உயர்த்தினார். தொடர்ந்து இந்தியா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவேரோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்தியா அங்கம் வகிக்கு பிரிக்ஸ் அமைப்பானது ரத்தக்காட்டேரி என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது,
”அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் பிரிக்ஸ் அமைப்பு நாடுகள், உயிர்வாழ முடியாது. அமெரிக்காவிற்கு அவர்கள் பொருட்களை விற்கும்போது தங்கள் வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள் போல் செயல்படுகிறார்கள். வரலாற்றுரீதியாக பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஒருவரையொருவர் வெறுப்பவை. ஆனால் இப்போது எப்படி ஒன்றாக இருக்கின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வரிகளை விதிப்பதில் இந்தியா மகாராஜாபோல் உள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா மிக உயர்ந்த வரிகளை விதிக்கிறது. உக்ரைனை ரஷ்யா போருக்கு பிறகுதான் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க தொடங்கியது. எங்கள் சந்தைகள் தேவை என்பதை உணர்ந்த நாடுகள் எங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியா விரைவில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் என்று நம்புகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 6 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப் பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்று டிரம்ப் கூறியது குறிப்பிடதகுந்தது.